இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

கிழக்கை பாதுகாக்க, வடக்கு- கிழக்கு இணைக்கப்பட வேண்டும்- தர்மலிங்கம் சுரேஸ்

தமிழ் மக்களின் போரட்டம் கருணா பிள்ளையானின் உச்சகட்ட பிரதேசவாதம் ஊடாக அழிக்கப்பட்டது. அவ்வாறு மீண்டும்  பிரதேசவாதம் ஊடாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதற்காக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற போலி முகங்களை மக்கள் இனங்கண்டு ஒரங்கட்டவேண்டும். அதேவேளை  சிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கை பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்படவேண்டும். அதற்கு மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஊடக கற்கை வளநிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் இந்திய ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்ட வடகிழக்கு இணைப்புக்கு எதிராக  ஜே.வி.பி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து அந்த இணைந்த வடகிழக்கு இணைப்பை பிரித்தது. இந்திய அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாட்டையும் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பட்டுக் கொண்டிருந்த ஜே.வி.பி கட்சி அனுரதிஸாநாயக்காவை இந்தியா அழைத்துள்ளனர். 1970 ம் ஆண்டு பகுதியில் தமிழ் மக்கள் உரிமை சார்ந்து இந்தியா தமிழ் இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு ஆயுத பயிற்சியளித்து ஆயுதங்களை கொடுத்து  ஆதரவு செய்துவந்தது. இந்த நிலையில் தமிழ் மக்கள் உரிமை சார்ந்த விடயங்களில் இருந்த இயக்கங்களில் விடுதலைப் புலிகள் கடைசிவரை உறுதியாக இருந்துவந்தனர். இந்த நிலையில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஒத்தாசை வழங்கி தமிழ் மக்களின் ஆயுத போராட்டத்தை  மௌனிக்க செய்தனர். இருந்தும் இந்த போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 வருடம் கடந்தும் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை எட்டாது மாறாக முன்னாள் கிளர்ச்சி படையான ஜே.வி.பியை அழைத்து சந்தித்தமை தமிழ் மக்களுக்கு பெரும் கவலையளித்துள்ளது. இந்தியா தமிழ் மக்கள் மீது ஒரு துளி கூட அக்கறையில்லாது தன்னுடைய பிராந்திய நலனுக்கு மாத்திரம் தமிழ் மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி கொண்டு வருகின்றமை இதில் இருந்து தெட்டதெளிவாக தெரிகின்றது. எனவே இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றவேண்டும். வடகிழக்கு மக்கள் தான் இந்தியாவுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். இந்தியாவை தமிழ் மக்கள் நேசிக்கின்றனர். இருந்தும் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட் பின்னர் கூட விடுதலைப் புலிகளின் தடையை நீக்காமல் தங்களுக்கு எதிராக செயற்பட்டவர்களை மாத்திரம் அழைத்திருப்பது ஒரு வேடிக்கையானது. ஜனாதிபதி 9 வது நாடாளுமன்ற 5 ம் கூட்டத் தொடரில் பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வு அவசியம் அல்ல என தெரிவித்தார். அது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் சி.சிறிதரன் தெரிவித்த கருத்துக்கள்  வேடிக்கையானது என்றனர். ஆனால் உண்மையில்  இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஜனாதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் நகைப்புக்குரியது. கடந்த 2015 நல்லாட்சி காலத்தில் மைத்திபாலவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்ணை மூடிக் கொண்டு எந்த விதமான நிபந்தனையும் செய்யாது தெருத் தெருவாக துண்டுபிரசுரங்களை வழங்கி ஆதரித்து ஆட்சிக்கு கொண்டுவந்தனர். இவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த நிலையில் எம்.சுமந்திரன்  அப்போது பிரதமர் போல இருந்தார். ஆனால் தமிழ் மக்களுக்குரிய அடிப்படை பிரச்சனையை கூட தீர்க்கவில்லை. அவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றியதுடன் தொடர்ந்து பின்கதவால் வந்த ஜனாதிபதியின் வரலாறு தெரிந்தும் அவருக்கு ஒரு சர்வதேச ரீதியில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால் இன்று ஜனாதிபதியின் உரையை பார்த்து இன்று நீதி கேட்பதாக நீலீக்கண்ணீர் வடித்து மீண்டும் மக்களை ஏமாற்றும் நாடகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஜனாதிபதியின் கடந்த கால செயற்பாடு தொடர்பாக தமிழ் மக்கள் மிக விழிப்பாக இருக்கின்றதுடன் தமிழ் மக்களை அழித்து ஒழித்துவரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளிப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கடந்த பெப்பிரவரி 4ம் திகதி வடக்கு கிழக்கில் கரிநாளாக பிரகடனப்படுத்தி வருவது வழமை. அந்த நிலையில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பொலிசாரின் அடக்குமுறைக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு மதகுருமார்கள் உப்பட பலர் கலந்கொண்டனர். இதன் போது வடக்கை சேர்ந்த ஒரு மதகுருவை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரை வடக்கில் போய் உங்கள் வேலையை பாருங்கள் என்ற பிரதேசவாதம் பேசியிருந்தார். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். ஏன் என்றால் கருணா பிள்ளையான் போன்றோர் இந்த பிரதேசவாத உச்சக்கட்டத்தினால் மிகவும் பலமாக இருந்த ஆயுதபோரட்டம் அழிக்கப்பட்டது. அவ்வாறே மீண்டும் பிரதேச வாதம் ஊடாக தமிழ் மக்களை அழிப்பற்காக செயற்பட்டுவரும் இப்படிப்பட்ட போலிமுகங்களை இனங்காணவேண்டும். இந்த நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக கடந்த காலத்தில் வெளிபடுத்தியுள்ளோம். பிள்ளையானும் சில முஸ்லீம் அரசியல் கட்சி தலைவர்களும் வடகிழக்கு இணையக் கூடாது என தெரிவித்து அவர்களின் அரசியல் அரங்கை அரங்கேற்றி வருகின்றனர். வடக்கி கிழக்கிலே உரிமைக்காக பல் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் உயிர் தியாகம் செய்த நிலையில் இப்படிப்பட்ட குறுகிய இலாபங்களுக்காக பிரதேசவாங்களை பேசி மக்களை சிதைக்கின்ற இந்த தரப்புக்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதேவேளை இவ்வாறான சூழ் நிலையிலே தமிழ் மக்களின் தேசமாக வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் இந்த பிரதேசவாதத்திற்கு துணைபோக மாட்டோம் என தமிழர்கள் கிழக்கு மாகாணத்திலே ஒரு உறுதியான நிலை எடுக்கவேண்டும். எனவே தமிழர்கள் இந்த தீவில் ஒரு நிம்மதியாக வாழவேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் உரிமை பிரச்சனை தீர்க்கப்படவேண்டும். தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் அங்கிகரிக்கப்பட வேண்டும். அதனூடாக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் என்றார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: