இலங்கைபிரபலமானவைவட மாகாணம்

மீண்டும் ஒரு தடவை நீதி கேட்கிறோம்!!

மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டி நீதி கேட்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளன.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

உலகிலே அதிகூடிய மனிதர்களை காணாமல் ஆக்கிய நாடுகளின் பட்டியலில் இரண்டாவதாக உள்ள நாட்டிலே வாழ்ந்து கொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக 2383 நாட்களாகப் போராடும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாங்கள் இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டி நீதி கேட்கிறோம்.

அரசினது பொய்யான வாக்குறுதிகளை நம்பி கைக்குழந்தைகள் சிறுவர்களுடன் சரணடைந்தவர்கள், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்கள், இராணுவத்தாலும் விசேட அதிரடிப்படையினராலும், இராணுவ துணைக்குழுக்களாலும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வைத்து கடத்தியும்,கைதுசெய்தும் கொண்டு செல்லப்பட்டவர்கள் என பல்வேறு வகையிலும் அரசபடைகளாலும், துணை இராணுவ குழுக்களாலும், தமிழர்கள் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அரசாலும், ராணுவ உயர்மட்ட அதிகாரிகளாலும் நன்கு திட்டமிட்ட முறையிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்த பின்பு எமது கைகளால் ஒப்படைத்தவர்களை திருப்பிக் கேட்கும்போது யுத்தத்தில் இறந்து விட்டதாக இலங்கை அரசில் பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் பொறுப்பற்று பதிலளிக்கின்றனர்.

அவர்கள் வேண்டுமென்றே பொய்யுரைப்பது தெரிந்தும் சர்வதேசம் அமைதிகாக்கின்றது. அதுமட்டுமல்ல எமது உறவுகளை காணாமல் ஆக்கிய மக்களை படுகொலை செய்த கொலையாளியை நீதிமானாக உருவகித்து உள்நாட்டு பொறிமுறையில் அவர்களிடமே நீதி கூறும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.

அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்களுக்கு நாம் விடுத்த வேண்டுகோள்களும் எமது அமைதியான போராட்டங்களும் ஆரம்பத்தில் எமது அன்புக்குரியவர்களைத் திருப்பித் தருமாறு அல்லது குறைந்த பட்சம் அவர்களின் கதியைப் பற்றிய தகவல்களை எமக்கு வழங்குமாறு, தொடர்ச்சியாக வந்த சிறிலங்கா அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தோம்.

எவ்வாறாயினும், எங்கள் கோரிக்கைகளுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. உள்ளூர் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்த நாங்கள் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைதியான முறையில் சர்வதேச நீதியை வேண்டியே போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆயின், இந்த அமைதியான ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் சிறிலங்கா இராணுவத்தினராலும் பொலிஸாரினாலும் கொடூரமாக முறையில் பல தடவைகள் நசுக்கப்பட்டுள்ளன.

இந்த சிறிலங்கா இராணுவத்தினரும் பொலிஸாரும் எமது அன்பிற்குரியவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் தொடர்பு பட்டவர்கள். இக்குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தாது நீதியிலிருந்து தப்பிக்க அனுமதிப்பது ஆனது சிறிலங்காவின் சிங்கள அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் தமிழ் சமூகத்திற்கு எதிராக மேலும் சர்வதேச குற்றங்களைச் செய்ய அனுமதி அளிக்கின்றது.

இந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் எம்மை சுற்றி தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதும், நம்மை அச்சுறுத்தும் செயல்பாடானதும் எமக்கு மரண பயத்தையும் நம்முடன் இருக்கும் நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் கவலை கொள்ள வைத்துள்ளது. இந்த பயம் நம்மை தினம் தோறும் ஆட்டிப்படைக்கிறது. இந்த அச்சுறுத்தும் சூழல் இருந்தபோதிலும், நாங்கள் எங்கள் போராட்டங்களில் உறுதியாக இருக்கிறோம்.

*காணாமல் போனோர் அலுவலகத்தை (OMP) அமைத்து ஏமாற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் தந்திரம்*

ஆறு வருடங்கள் காலங்கடத்திய பின்பும், அரசினால் சர்வதேசத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட OMP ஆனது , செயல்திறனற்றது, அது எமக்கு வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர்களாகிய நாம் ஆதாரத்துடன் நிரூபித்த பின்பும் கூட அந்த OMP எமக்கான நீதியை வழங்கும் என்று கூறுவதும் OMP ஐ எம்மீது திணிக்க குறுக்கு வழிகளைக் கையாள்வதும் மிக மனவேதனைக்குரியது. கொலையாளியிடமே கொலைக்கான நீதியை வழங்கும் பொறுப்பை கொடுப்பது எந்த வகையில் நியாயம்? உள்ளகப் பொறிமுறையை எம்மீது திணிக்க முயலும் நாடுகள் தமது நாட்டில் அல்லது தமது அன்பிற்குரியவர்கள் வாழும் நாட்டில் இப்படி நடந்துகொள்வார்களா? இலங்கையில் 1958ம் ஆண்டில் இருந்து தமிழர் மீதான இனவழிப்பும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலும் நடந்தேறியவண்ணம் உள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோரை படுகொலை செய்தும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை வலிந்து காணாமலாக்கியும், பல்லாயிரக்கணக்கானோரை ஊனமுற்றவர்கள் ஆக்கியும் தமிழினத்தை துவம்சம் செய்த சிறிலங்கா அரசுக்கு எவ்வித கண்டனத்தையும் தெரிவிக்காத சர்வதேசம், கொலையாளியையே நீதிபதியாக்க கடும் பிரயத்தனப்படுவது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதற்கு நாதியற்ற தமிழர்கள் என்பதாலா? ஆனால் சிரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே பல நாடுகள் கண்டனங்களை தெரிவிப்பதும் எவ்வித தாமதமின்றி உடனடி நடவடிக்கைகளை எடுப்பதும் எம்மை ஆச்சரியப்படவைக்கிறது. ஏன் இந்த பாரபட்சம்?

*OMP தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பதில்*

UN மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் திருமதி மிசெல்லே பசேலெட் அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது அறிக்கையில், OMP மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றுக்கான சமீபத்திய நியமனங்கள் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வலுவிலகச் செய்வதாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவித்தார்.

*பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்று கொடுக்க சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரப்படுத்தவும்.*

நீதியை அடைவதற்கு, சுதந்திரமான சர்வதேச பொறுப்புக்கூறல் செயல்முறை மட்டுமே போதுமானது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரப்படுத்துவதன் மூலமே நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையும் , முந்தைய மனித உரிமைகள் ஆணையாளர்கள், சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு உட்பட பல ஐ.நா அதிகாரிகளால் வழிமொழியபட்டதையும் இதில் சுட்டி காட்ட விரும்புகின்றோம்.

ரோம் சாசனத்தில் கைச்சாத்திடாத வடகொரியா, சிரியா, ரஷ்யா, மியன்மார் போன்ற நாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி தேட வழிமுறைகளை கண்டறிய முடிந்த சர்வதேச சமூகத்தினால் சிறிய நாடான சிறிலங்காவை நீதியின் முன் நிறுத்த பின்னாடிப்பதின் காரணத்தை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அத்துடன் சிறிலங்காவின் பொருளாதார நிலையை சீர்படுத்த முயலும் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் மீண்டும் ஒரு மனித பேரழிவு, இனவழிப்பு இந்த மண்ணில் நிகழாமையை உறுதிசெய்ய வேண்டும். சிறிலங்கா அரசு ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுவதை முன் நிபந்தனையாக முன்வைக்க வேண்டும்.

சிறிலங்கா அரசுக்கு அவகாசம் கொடுத்து காலத்தை இழுத்தடித்ததன் மூலம் 180 இற்கும் மேற்பட்ட பெற்றோரை இழந்து “கண்கண்ட நேரடியான சாட்சிகள் 180 பேர்”அழிந்தது தான் மிச்சம். மீண்டும் TRC என்ற பெயரில் வேறோர் உள்ளக பொறிமுறையை எங்கள் மீது திணித்து கால இழுத்தடிப்புக்கு துணை போவதன் மூலம் மிகுதியுள்ள நேரடிசாட்சிகளான எங்களையும் இறக்க விட்டு சாட்சிகள் அழிவதற்கு துணை போகாமல் எங்களின் கோரிக்கையான சர்வதேச விசாரனை ஒன்றின் மூலம் ICC க்கு அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் எங்களுக்கு விரைவான நீதியை பெற்றுத்தர சர்வதேசமும் ,ஐ.நா வும் முன்வரவேண்டும் என்று இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மீண்டும் ஒரு தடவை எமது கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

*எங்கள் அன்புக்குரியவர்களின் அவல நிலையை அறிய ஒரு சர்வதேச குழுவை நியமிக்கவும்*

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் என்ற வகையில், எங்களின் அன்புக்குரியவர்களின் அவலநிலையை சுயாதீனமாக ஆராய்வதற்காக சர்வதேச பிரமுகர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் தான் அவர்கள் காணாமல் போன சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்.

*இனவழிப்பு மீள நிகழாமைக்கு நிரந்திர அரசியல் தீர்வு அவசியம்*

அத்துடன் இன்று வரை தொடர்ந்து நிகழ்ந்து வரும் இனவழிப்பும் பெளத்த மயமாக்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்நிலை மாறி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் இத்தீவில் அமைதி நிலை ஏற்படவும் ஓர் நிரந்திர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். இத்தீர்வானது வடக்கு கிழக்கு மாகாணங்களை தாயகமாக கொண்ட மக்களிடையே சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் சர்வசன வாக்கெடுப்பினூடக தீர்மானிக்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: