இலங்கைமலையகம்

மஸ்கெலியாவில் இ.போ.ச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்; பயணிகள் விசனம்

மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வந்த அரச பேருந்து சேவைகள் பல இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வரும் அவிஸ்சாவலை அரச பேருந்து சேவைகள் கடந்த சில மாதங்களாக முறையாக சேவையில் ஈடுபடவில்லை.

இதன் காரணமாக சாமிமலை மஸ்கெலியா வழியாக தலைநகர் செல்லும் அவிசாவளை பேருந்து நிலையத்திற்கு உரித்தான அரச பேருந்து சேவைகள் மற்றும் மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வந்த அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பல சேவைகள் இடை நிறுத்தம் காரணமாக பாடசாலை மாணவர்கள்,பயனிகள் மற்றும் நோயாளிகள் பாரிய அளவில் சிரமத்திற்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அவிசாவளை அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் இன்று(20) தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டபோது,

பல பேருந்துகள் இயந்திரக் கோளாறு காரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்துகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அந்த பேருந்துகளுக்கு உபகரணங்கள் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரச பேருந்து நிலைய கட்டுப்பாடு படி, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஊடாக இயந்திர உபகரணங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு இடங்களில் பெற்று கொள்ள முடியாது.

ஆகையால் உபகரணங்கள் பெற்றுக் கொள்வதில் பெரும் சிக்கலாக உள்ளது. ஆகையால் பேருந்து சேவைகளை இடை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாளாந்தம் கொழும்பு நோட்டன் வழியாக ஆறு சேவைகள் இடம் பெற்று வருகிறது. அதே போல் அவிசாவளை நோட்டன் வழியாக மஸ்கெலியா நல்லதண்ணி வரை ஆறு சேவைகள் இடம் பெறும்.

தற்போது அந்த சேவைகளில் பல இடை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாக நாளாந்தம் தொலைபேசி ஊடாக புகார் செய்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள், நோயாளிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: