இலங்கைகிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்ரினா முரளிதரனின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ்  இன்று(27) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் ஏற்படுகின்ற இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் ”உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலகத்தில் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம், லயன்ஸ் கழகத்தின் நிதி அனுசரணையுடன் ஒழுங்கமைக்கப்பட்டது.

போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் விவேகானந்தநாதன் உரையாற்றுகையில் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு  அதிகளவான இரத்தம் தேவைப்படுவதாகவும், தலசிமியா, விபத்துக்குள்ளான நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் போன்றவர்களுக்கு அதிகளவான குருதி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த காலங்களில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்ட போது வேறு மாவட்டங்களிடமிருந்தே குருதியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக மாவட்டத்தில் அதிகளவில குருதிக்கொடை வழங்கப்பட்டு வருகின்றமையினால் குருதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக உள்ளது எனவும் மேலும் பிரதேச மட்டங்களில் வழங்கப்படுகின்ற குருதியினை அதிகரித்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில்  243ம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சன்டிமா குமாரசிங்க, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ். கே. எம். பிரியந்த மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ் எம். பஷீர், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் பதவி நிலை அதிகாரிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி. நிசாந்தி அருள்மொழி, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் க. மதிவண்ணன் மற்றும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் செயற்திட்ட தலைவர் ரி. ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்விற்கு இராணுவம், பொலிஸ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் குருதி வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: