இலங்கைகிழக்கு மாகாணம்

கல்முனையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்கு சேவை நலன் பாராட்டு

கல்முனைப் பிராந்தியத்தில் அதிதீவிர போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைக் கண்காணித்து அவர்களின் சுகாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பாராட்டிப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

செரி சர்வதேசத் தொண்டு நிறுவனம் கல்முனைப் பிராந்தியத்தில் அதிதீவிர போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவும் பொருட்டு கடந்த 6மாதங்களாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

குறித்த உத்தியோகத்தர்களை பாராட்டிக் கௌரவிக்கும் பொருட்டு  பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு ஏற்பாடு செய்த சேவை நலன் பாராட்டு விழா கடந்த(24) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. பிராந்திய தாய் சேய் நலன் பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம். எச். றிஸ்பினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம். சி. எம். மாஹிர், பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம். ஏ. சி. எம். பசால், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, நாவிதன்வெளி மற்றும் நிந்தவூர் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள், செரி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேற்குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் இதன் போது பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பெண்களுக்கான நலன் கிளினிக்கில் மிகத் திறமையாக செயல்பட்டு முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கும் இந்நிகழ்வின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனைப் பிராந்தியத்தில் அதிதீவிர போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் சுகாதார நலன் கருதி பல்வேறு கிளினிக், போஷாக்கு உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் உதவித் தொகைகளையும் வழங்கி செரி சர்வதேச தொண்டு நிறுவனம் பெரும் பணியாற்றியுள்ளது.

2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 325 ஆகக் காணப்பட்ட அதிதீவிர போசாக்கு குறைபாடு உள்ள பிள்ளைகளின் எண்ணிக்கையானது தற்போது 129 ஆக குறைந்துள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: