இலங்கைகிழக்கு மாகாணம்பிரபலமானவை

ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப் பெருவிழாவும் 108

மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டை சந்திவெளி திருவருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப் பெருவிழாவும் 108 அஷ்டோத்திர சங்காபிஷேகப் பெருவிழா நிகழ்வு இன்று மரபு வழி கலாச்சாரத்துடன் சிறப்பாக நடைபெற்றது.


தட்சன கைலாயம் என சிறப்பு பெற்ற இலங்கைத் திருநாட்டின் சிவ பூமி என திருமூலரால் சிறப்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே நீர் வளம், நில வளம்,செந் நெல் வயல்களும் பெருமை மிகு ஸ்தலங்களோடு விளங்கும் திகிலிவெட்டை பதியில் பறவையினம், பாட்டிசைக்க கறவையினம் பால்சொரிய வேம்பு மரத்தின் விருட்சத்தின் கீழ் அமர்ந்து தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் கோடி வரமளித்து அருள் மழை பொழிந்து கொண்டிருக்கும் திருவருள் மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் சோபகிருது வருடம் பிரதமை திரியும் கார்த்திகை நட்சத்திரமும் அமிர்த யோகம் கூடிய வைகாசி திங்கள் 6 ஆம் நாள் அதாவது 20.05.2023 ஆகிய இன்று சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.


 முதலாம் நாளாகிய இன்று அதிகாலை திகிலி வெட்டை தன்னானை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து விசேட பூசைகள் நடைபெற்று தேவாதிகளின் அருள் ஆசியுடன்  அம்மன் கும்பி பாடலகள்; இசைக்க வாவிக்கரையில் புனித நீர் எடுக்கப்பட்டது.


எடுக்கப்பட்ட புனித நீரானது ஊர்வலமாக திகிலிவெட்டை பிரதான வீதி வழி ஊடாக பல்வேறு ஆலயங்களை தரிசித்தும்  மக்களுக்கு அம்மன் அருளாசி வழங்கியும் ஆலயத்திற்கு எடுத்து வரபட்டது.இதன்போது மக்கள் வீதியில் பூரண கும்பங்களை வைத்து வழிபட்டனர்.ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட புனித நீர் ஆலயத்தை வந்தடைந்ததும் திருக்கதவு திறக்கப்பட்டது.


பின்னர் புனித நீரினைக் கொண்டு ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு 108 ஸ்த்தோத்திர சங்காபிஷேக நிகழ்வும் நடைபெற்றது.
ஆலயத்தில் தொடர்ந்து 5 நாட்கள் திருச்சடங்குகள் நடைறெவுள்ளன. இறுதி நாள் பூசைகள் எதிர்வரும் 24.05.2023 அன்று புதன் கிழமை கன்னிமார் பூசை, அம்பாளின் தீ மிதித்தல், பள்ளைய பூசைகள் மற்றும் அம்பாளின் திருக்குளித்தியுடன் பூசைகள் யாவும் இனிதே நிறைவு பெறவுள்ளது.

அனைவரும் வருகை தந்து அம்பாளின் பேரருளை பெற்றுச் செல்லுமாறு ஆலய பரிபலான சபையினர் கேட்டுக்கொள்கின்றனர். உற்சவ நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குருவும் ஆதின தர்மகர்த்தாவும் கிரியா வித்தகர் சிவாச்சாரியார திலகம் சிவஸ்ரீ செ.மகேந்திரக் குருக்களுடன் கிரியா அலங்கார திலகம் சிவஸ்ரீ வெ.கமலநாத சர்மா மற்றும்  உற்சவ கால பிரதம குரு மாந்திரிக பூசகர் சிவதிரு செ.கி.கிருபைரெத்தினம் ஆகியோர்கள்  கலந்து கொண்டு உற்சவ கால  திருச்சடங்குகளை நடாத்துவார்கள்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: