இலங்கைகொழும்புமுக்கிய செய்திகள்

சீனாவின் இரகசிய திட்டம்: ஆபத்துக்கள் குறித்து சபா குகதாஸ் வெளியிட்டுள்ள தகவல்!

அண்மையில் வெளிநாட்டு இணையதள ஊடகங்களில் சீனாவின் இரகசிய திட்டம் ஒன்று இடம்பெறுவதாக வெளியான செய்தி தற்போது உள்நாட்டு ஊடகங்களில் அது பேசு பொருளாக மாறியள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, சீனாவானது இலங்கையில் ராடர் ஒன்றை அமைத்து வருவதாகச் சொல்லப்படுகின்றது. அந்த ராடர் நிலையம் அமையப்பெற்று பூரண செயற்றிறனுக்கு வருமாக இருந்தால் அதனூடாக வரும் ஆபத்துக்கள் குறிப்பாக இந்தியாவுக்கும், இந்தியாவினுடைய பிராந்தியத்துக்குள் ஊடுருவி இருக்கின்ற நாடுகளினுடைய இரகசிய திட்டங்களுக்கும் ஆபத்துக்கள் காத்திருப்பதாகத் தான் சொல்லப்படுகின்றது.

ராடர் நிலையம்
குறிப்பாக இந்தியாவினுடைய பல்வேறு இரகசிய நடவடிக்கைகளை ஆராய்வதற்கு இந்த ராடர் நிலையம் பயன்படும் என ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்றது.

குறிப்பாக இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற ஏவுகணை தளங்கள், விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள், இந்தியாவினுடைய மேற்குப் பகுதியில் இருக்கின்ற கடற்படை தளங்கள், இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ தளங்கள் என்பன எல்லாம் கேள்விக்குள்ளான நிலைக்கு உள்ளாகும் என சொல்லப்படுகின்றது.

மற்றும் இந்தியப் பிராந்தியத்தில் அமையப்பெற்றுள்ள அமெரிக்க, பிரித்தானியாவினுடைய இராணுவ தளங்கள் இதன் மூலமாக வேவு பார்க்கப்படும் எனச் சொல்லப்படுகின்றது.

அச்சுறுத்தல்கள் ஏற்படவில்லை
அத்துடன் அந்தமான், நிக்கோவா தீவுகளும் அந்த ராடரின் வேவுக்குள் உட்படுவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே இது ஒரு பாரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகின்றது. உண்மையிலேயே இலங்கையினுடைய எதிர்காலம் பூகோள நலன் சார்ந்த நாடுகளின் அரசியலில் கொதிநிலையாகவே மாற இருக்கின்றது.

குறிப்பாக இலங்கையினுடைய நிலவரத்தில் இவ்வாறு இருக்கின்ற நேரம் இந்தியாவுக்கு இது எதிர்காலத்தில் பாரிய ஒரு சவாலாக இருக்கப் போகின்றது. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவினுடைய தென்னெல்லைக்கோ அல்லது இந்தியாவினுடைய பிராந்திய கடற் பகுதிக்கோ எந்தவிதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை.

காரணம் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தின் கட்டமைப்பின் பலம் இந்தியாவின் தென் எல்லைக்குள் ஒரு பாதுகாப்பாக வைத்திருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி எல்லாமே ஒரு கேள்விக்கு உள்ளாகின்ற நிலையாக மாறியுள்ளது.

தமிழர் பிரச்சினை
இது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பையும் பிராந்திய பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. ஆகவே இந்த நிலையை இந்தியா உணர்ந்து எதிர்வரும் காலங்களிலாவது இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இலங்கையில் சீனாவின் உடைய அகலக்கால் பதிப்பானது மேன்மேலும் இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதனை இவ்வாறான செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகிறது ஈழத் தமிழர்களது பிரச்சினைகளில் இனியாவது இந்தியா கரிசனை காட்ட வேண்டும்.

இந்தியாவானது ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அதன் மூலமாகத்தான் இந்த கொதிநிலை அரசியலையோ அல்லது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அல்லது பிராந்திய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: