உலகம்கனடா

கனடாவில் நினைவுகூரப்படவுள்ள தமிழின படுகொலை நாள்..!

கனடாவில் உள்ள ஒட்டாவா தமிழ் சங்கம், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதியன்று ஒட்டாவாவில் நினைவுகூர திட்டமிட்டுள்ளது.

அன்றைய தினத்தில் பல தமிழ் அமைப்புகள் நிகழ்வில் கலந்துகொண்டு கூட்டறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் முன்னதாக கடந்த ஆண்டு மே 18ஆம் திகதியன்று, கனேடிய நாடாளுமன்றம் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலையை அங்கீகரித்து, ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக நிறுவியது.

இதன்போது ஒட்டாவா தமிழ் சங்கம், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை இந்தமுறை எதிர்வரும் மே 18ஆம் திகதி இரவு 7 மணியளவில் வோல்டர் பேக்கர் விளையாட்டு மையத்தில் நினைவுகூர திட்டமிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி

இதில், தமிழர் எழுச்சியின் அடையாளமாக தீபம் ஏற்றும் நிகழ்வு இடம்பெறும். அத்துடன் 2009ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில், இந்த தமிழர்களுக்கு கிடைத்த ஒரே உணவு, ஒரு சிட்டிகை உப்பு நீரில் சமைத்த ஒரு பிடி அரிசி மட்டுமே என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு தருணத்தைக் குறிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் இனப்படுகொலையை பரந்த அளவில் அங்கீகரிப்பதற்காக கனடா சரியான நடவடிக்கைகளைப் பின்பற்றவும், ஈழத் தமிழ் சமூகத்திற்கு நீதி வழங்க இலங்கை அரசாங்கத்தையும் அதன் அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதில் தீவிரப் பங்காற்றுமாறும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதாக ஒட்டாவா தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: