இலங்கை

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு 36 துப்பாக்கிகள் குறித்து விசாரணை!

அண்மையில் அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை முகாமில் இருந்து 36 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 14ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அன்றைய தினம் இராணுவ முகாமில் இருந்து கடமைக்காக வழங்கப்பட்ட 36 துப்பாக்கிகளை அஹுங்கல்ல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அஹுங்கல்ல மித்தரமுல்ல பிரதேசத்தில் கடந்த 14ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை முகாமுக்கு அருகில் உள்ள புதரிலிருந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பயன்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ பொலிஸ் மோப்ப நாய் இரண்டு தடவைகள் அருகிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட அஹுங்கல்ல பொலிஸார், குறித்த இராணுவ முகாமில் இருந்து அன்றைய தினம் கடமைக்காக வழங்கப்பட்ட 36, T-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: