இலங்கைகிழக்கு மாகாணம்

அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் பயிற்சிக் கருத்தரங்கு

சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் நிறுவப்பட்டுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தி ஆரோக்கியமான சமூகமொன்றினைக் கட்டியெழுப்பும் நோக்கில் சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பணியகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வேலைத்திட்டத்திற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய சுகாதார கல்வி பிரிவினால் கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிக் கருத்தரங்கு நேற்று(20) பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப். எம். உவைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம். எச். றிஸ்பின், மாவட்ட சுகாதார கல்வி அதிகாரி எம்.ஜே.எம்.பைறூஸ், பல் வைத்திய நிபுணர் ஏ.ஆர்.கத்தாபி, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலிக் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு விரிவுரையாற்றினர்.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 70 உறுப்பினர்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர். குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு யுனிசெப் நிறுவனம் நிதியுதவி வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: