இலங்கைஉலகம்ஐரோப்பா

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புதிய முதலீடுகள் தொடர்பில் நம்பிக்கை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான குறுகிய கால மூலோபாயமாக சுற்றுலா ஊக்குவிப்பு, விவசாய நவீனமயமாக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்காக இலங்கை தற்போது புதிய முதலீடுகளை ஈர்க்கும் நம்பிக்கையில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று (17) சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் (WEF) பங்குதாரர்கள் உரையாடலின் ஒரு அங்கமான நிபுணர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

விளிம்பிலிருந்து பின்வாங்குதல் என்ற தலைப்பில் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

இலங்கையின் எதிர்கால நோக்கு மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அணுகுமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இலங்கை இதுவரை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை கோடிட்டுக் காட்டியதுடன், இந்த ஆண்டு 2% பொருளாதார வளர்ச்சியை இலங்கை எதிர்பார்ப்பதாகவும், அடுத்த வருடம் அதனை 5% ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் படி, அரசாங்க வருவாயை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வருவாய் சேகரிப்பு உத்திகளில் சீர்திருத்தம் மற்றும் வருவாய் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவன ரீதியான கட்டமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார்.

அதேநேரம் இந்த சந்திப்பில் பாரம்பரிய நிதி விதிகளை கடைபிடிக்கும் போது பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மக்களுக்கு அத்தியாவசிய வசதிகளை வழங்குவதற்கும் கடுமையான நிதிச் சட்ட விதிகளை நிர்வகிப்பதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

வரி அதிகரிப்பு காரணமாக மக்களுக்கு ஏற்படக் கூடிய அதிருப்தி குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, இலங்கை வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பழகிவிட்டதாகவும், அதற்கு நாடு திறந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கும் தனித்துவமான சவால்கள் குறித்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அவர்களுக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கு தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், அதற்கான கூட்டு முயற்சியின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: