மட்டக்களப்பு கிரான்குளப் பகுதியில் வீதியில் சரிந்த கிடந்த மின்சார கம்பத்தை திருத்த வேலையில் ஈடுபட்டபோது தொலைபேசி கம்பி அறுந்து வீதியால் மோட்டர்சைக்கிளில் சென்ற இருவர் மீது வீழ்ந்ததையடுத்து கழுத்து வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்தில் தந்தை உயிரிழந்ததுடன் மகன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று புதன்கிழமை (02) காலை 11 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை சவளக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய றிஸ்வான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் வீதியில் இருந்த மின்சார கம்பம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
சம்பவதினமான இன்று காலையில் திருத்தும் பணியில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொலைபேசி கம்பி அறுந்து காத்தான்குடியில் இருந்து கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்தவர்கள் மீது வீழ்ந்ததையடுத்து மோட்டர்சைக்கிளில் பின் இருந்து பிரயாணித்த தந்தை கழுத்து வெட்டப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற அவரது 18 வயது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.