இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை எமக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி ஏனைய நாட்டு தலைவர்களும் வரவுள்ளனர் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் நேற்று சனிக்கிழமை (29) பழைய கச்சேரி மண்டபத்தில் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எமது நாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதை முக்கியமான விடயமாக பார்க்கின்றோம் அவரின் வருகையின் பின்னர் ஏனைய நாட்டு தலைவர்களும் வர இருக்கின்றனர் என தெரிவித்தார்.
இன்று மிகக்குறுகிய காலத்தில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக் கொண்டு இராஜதந்திர ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்து வந்துள்ளோம் இந்த வெற்றியின் பின்னர் எமது நாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதை முக்கியமான விடயமாக பார்க்கின்றோம்.
இந்தியாவுடன் சூரிய சக்தி மின்சாரம் தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் செய்யவுள்ளோம் அதுமட்டுமல்ல இந்திய அரசின் பாரிய உதவி மூலம் கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது என மேலும் தெரிவித்தார்.