மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட சந்திவெளி – திகிலிவெட்டை இயந்திரப் படகுப் பாதை கடந்த எட்டு மாத காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது திருத்தியமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் படகை பழுதுபார்ப்பதற்கு தேவையான மின்சார வசதியின்மை உள்ளிட்ட பல காரணங்களினால் உரிய நேரத்திற்கு குறித்த படகு சேவையானது புனரமைக்கப்படாமலிருந்த நிலையில் தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இறை வழிபாட்டுடன் சுப வேளையில் மக்களின் சேவைக்காக ஆற்றில் இறக்கி விடப்பட்ட படகு சேவை மக்களின் பாவனைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பார்த்தீபன், கிரான் தெற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் கே.சித்திரவேல், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.ராகீதரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

