தார்மீக சமூகத்திற்கான சமூக விழிப்புணர்வு அமைப்பின் (ஸம்ஸ் சிறீலங்கா) பல தசாப்தங்களுக்கும் மேலாக எமது சமூகத்திற்கு அளப்பரிய சேவைகளை செய்த சிரேஷ்ட சமூக சேவையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புக்களை கௌரவிக்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் ஏ.ஜே.ஜனூபர் தலைமையில் செயலாளர் எம்.எம்.அப்துல் ஹமீட் இன் வழி நடாத்தலில் நேற்று இடம்பெற்றது.
சமூகத்தில் ஒழுக்கமான கௌரவமாக வாழக்கூடிய எதிர்கால சந்ததிகளை உருவாக்கி தெளிவான புரிதலோடு எதையும் எதிர்கொண்டு சமாளிப்போம் சாதிப்போம் எனும் நோக்கத்தோடு இளம் தலைமுறையின் அங்கத்தவர்களால் முன்கொண்டுசெல்லப்படும் ஒரு சமூக அக்கறையுள்ள சம்ஸ் சிறீலங்கா அமைப்பு
பல்வேறுபட்ட சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அதில் ஒரு அங்கமாக ஆண்டுதோறும் சமூக சேவை சார்ந்த தனி நபர்களையும் நிறுவனங்களையும் அவர்களது சமூக சேவையினை பாராட்டி கௌரவித்து வருகின்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் டாக்டர் யு.எல்.அப்துல் மஜீட், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கெளரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை செயலாளர்
எஸ்.சிஹாபுடீன் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் குரூஸ் குணரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் ஸம்ஸ் சிறீலங்கா அமைப்பின் உத்தியோகபூர்வ இலச்சினை அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது.

