எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் கட்டான பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சஹ்ரான் அவர்களை ஆதரித்து மக்கள் சந்திப்பு நேற்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அவர் இதன்போது கருத்துதெரிவிக்கையில்,
அரசியலிலேயே உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் முக்கியமானதொன்றாக காணப்படுகிறது. அதை கைப்பற்றுகின்ற போதுதான் எதிர்காலங்களில் மாகாணசபை மற்றும் பாராளுமன்றம் போன்ற அதிகாரங்களை கைப்பற்ற முடியும்.
நீர்கொழும்பானது முதலாவது முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் மர்ஹும் அனீஸ் ஷரீப் அவர்களை பெற்ற பிரதேசம். ஆகவே அந்த பிரதேசம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.
கடந்த தேர்தலில் முற்பதுனாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனது.
எதிர்காலத்தில் எங்களுடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கு இச் சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்பதோடு உச்ச அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். எனவே நீங்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் மரச்சின்னத்திற்கு வாக்களித்து முஸ்லிம் காங்கிரஸின் கரத்தை பலப்படுத்தவேண்டும்.
நீர்கொழும்பு மாநகர சபை அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக நமது கட்சியை மாற்றவேண்டும். அதேபோன்று கட்டான பிரதேச சபைத் தேர்தலிலும் எமது கட்சியில் பலத்தை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இந் நிகழ்வில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீம், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட முக்கியஸ்தர்கள், கட்டான பிரதேச கட்சியின் மத்திய முழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்