இந்தியச்செய்திகள்இலங்கைபிரபலமானவைவட மாகாணம்

யாழ்ப்பாண புறா தனுஷ்கோடியில் தஞ்சம்!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவரின் பந்தய புறா ஒன்று கடல் கடந்து தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளமை அந்நாட்டு உளவுத்துறைக்கே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சுதன் என்பவருக்கு சொந்தமான புறாவே இவ்வாறு தனுஷ்கோடியில் தஞ்சமடைந்ததாகும்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புலித்தேவன் நகரை சேர்ந்தவர் அரச குமார். இவர் கடந்த 16ஆம் திகதி தனுஷ்கோடியில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். தனுஷ்கோடியில் இருந்து ஏழு கடல்மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காலில் பிளாஸ்டிக் கட்டிய புறா ஒன்று அவரது நாட்டுப்படகில் தஞ்சமடைந்துள்ளது.

புறா காலில் கட்டியிருந்த பிளாஸ்டிக்கில் சில எண்கள் குறிப்பிப்டபட்டிருந்தததுடன் ஆங்கிலத்தில் எழுதி இருந்ததால் அச்சமடைந்த அரசகுமார் அந்த புறாவை ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து அந்த புறாவின் காலில் உள்ள பிளாஸ்டிக்கில் இலங்கை தொலைபேசி எண் இருந்ததால் அந்த எண்ணிற்கு மாநில உளவுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அந்த புறா இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சுதன் என்பவருக்கு சொந்தமானது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சுதனிடம் நடத்திய விசாரணையில் தமிழ் –சிங்கள புத்தாண்டையொட்டி கடந்த 15ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் புறா பந்தயம் நடத்தப்பட்டதாகவும், இந்த பந்தயத்தில் சுதனுக்குச் சொந்தமான 28 பந்தய புறாக்கள் பந்தயத்தில் கலந்து கொண்டதாகவும், அதில் 20 புறாக்கள் மட்டும் திரும்பிய நிலையில் எட்டு புறாக்கள் காணாமல் போனதாகவும் சுதன் தெரிவித்துள்ளார்.

அரசகுமார் ஒப்படைத்த புறா சுதன் உடையதா என உறுதிப்படுத்த உளவுத்துறை அதிகாரிகள் புறாவை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் சுதனுக்கு அனுப்பினர். புகைப்படத்தை பார்த்த சுதன் பந்தயத்தில் காணாமல் போன எட்டு புறாக்களில் இதுவும் ஒன்று என உறுதி செய்தார்.

இதையடுத்து ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மருதுபாண்டியர் நகரில் வசித்து வரும் ரகு என்பவர் தனது வீட்டில் புறா வளர்த்து வருவதால் அந்த புறா கூண்டில் இந்த புறாவையும் வைத்து வளர்க்கும் படி காவல்துறையினர் அவரிடம் ஒப்படைத்தனர்.

இந்த புறா, ‘ஹோமர்’ இனத்தை சேர்ந்த பந்தய புறா எனவும் தொடர்ந்து 300 கிலோ மீற்றர் தூரம் பறக்க கூடிய ஆற்றல் உடையது என்பதால் இலங்கை வல்வெட்டிதுறையில் இருந்து தனுஷ்கோடி வரை பறந்து வந்துள்ளதாகவும், இந்த புறா மீண்டும் தனது சொந்த இடத்திற்கு திரும்பி செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: