ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ, 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை தவறாகக் காட்டுவதாகக் கூறப்படும் AI- அடிப்படையிலான டீப்ஃபேக் வீடியோ ஆன்லைனில் பரப்பப்பட்டது தொடர்பாக டெல்லி போலீஸ் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக செயல்பாடுகள் (IFSO) பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகம் பொருத்தப்பட்ட டீப்ஃபேக் வீடியோ இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், ராஷ்மிகா சிறிய வொர்க் அவுட் உடையில் லிப்டிற்குள் நுழைந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், வீடியோவில் உண்மையில் நடித்திருப்பது இன்ஸ்டா பிரபலம் ஜாரா படேல் என்றும், ராஷ்மிகாவின் முகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தவறாக பொருத்தப்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டது.
இந்த வீடியோவிற்கு எதிராக ராஷ்மிகா கொந்தளித்து இருந்தார். மேலும், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வீடியோ வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தனர்.
இந்தநிலையில், இந்த விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஐ.பி.சி.,யின் பிரிவுகள் 465 (போலி செய்ததற்கான தண்டனை) மற்றும் 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்) மற்றும் ஐ.டி சட்டத்தின் பிரிவுகள் 66 மற்றும் 66 ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
வீடியோவின் அசல் ஆதாரம் கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வீடியோவை கவனத்தில் கொள்ளுமாறு டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
