கிரிக்கெட்விளையாட்டுச்செய்திகள்

ராஜஸ்தானை துவம்சம் செய்த பெங்களூர் 112 ஓட்டங்களால் அமோக வெற்றி

ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ், க்லென் மெக்ஸ்வெல் ஆகியோர் குவித்த அரைச் சதங்களைத் தொடர்ந்து  துல்லியமான பந்துவீச்சுக்கள் உதவியுடன் ராஜஸ்தான் றோயல்ஸை 112 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் துவம்சம் செய்தது.

டு ப்ளெசிஸ், மெக்ஸ்வெல் ஆகிய இருவரது துடுப்பாட்ட உதவியுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட பெங்களூர் பந்து வீச்சாளர்கள் ஐவரும் துல்லியமாக பந்துவீசி ராஜஸ்தான் றோயல்ஸை 10.3 ஓவர்களில் 59 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பதிவான  3ஆவது  மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 2017இல் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் பெற்ற 49 ஓட்டங்களே ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 12 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கு முன்னேறியதுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் 12 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

அப் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாடியபோது விராத் கோஹ்லியும் பவ் டு ப்ளெசிஸும் 7 ஓவர்களில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்த சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

கோஹ்லி 18 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த பவ் டு ப்ளெசிஸும் க்ளென் மெக்ஸ்வெலும் 47 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எனினும் டு ப்ளெசிஸ் (55), மஹிபால் லொம்ரோர் (1), தினேஷ் கார்த்திக் (0) ஆகிய மூவரும் ஒரு ஒட்ட வித்தியாசத்தில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

மொத்த எண்ணிக்கை 137 ஓட்டங்களாக இருந்தபோது மெக்ஸ்வெல் 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 33 பந்துகளை எதிர்கொண்ட மெக்ஸ்வெல் 5 பவுண்டறிகளையும் 3 சிக்ஸ்களையும் விளாசினார்.

தொடர்ந்து அனுஜ் ராவத், மிச்செல் ப்றேஸ்வெல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 15 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 171 ஓட்டங்களாக உயர்த்தினர். 

அனுஜ் ராவத் 11 பந்துகளில் 29 ஓட்டங்களுடனும் மிச்செல் ப்றேஸ்வெல் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கே. எம். ஆசிப் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது இளம் அதிரடி நாயகன் யஷஸ்வி ஜய்ஸ்வால் முதலாவது ஓவரிலும் ஜொஸ் பட்லர் 2ஆவது ஓவரிலும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

2ஆவது ஓவரில் அணித் தலைவர் சஞ்சு செம்சனும் 5ஆவது ஓவரில் தேவ்தத் படிக்கலும் தலா 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க ராஜஸ்தான் றோயல்ஸ் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ராஜஸ்தான் றோயல்ஸ் சார்பாக இந்த வருடம் 3ஆவது போட்டியில் விளையாடிய, ஆனால் முதல் தடவையாக துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஷிம்ரன் ஹெட்மயர் துணிச்சலுடன் அதிரடியில் இறங்கி 19 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்றிருக்காவிட்டால் ராஜஸ்தான் றோயல்ஸின் நிலை தர்மசங்கடமாகி இருக்கும்.

மத்திய மற்றும் பின்வரிசையில் வேறு எவரும் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் களம் விட்டகன்றனர்.

பந்துவீச்சில் வெய்ன் பார்னல் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ப்றேஸ்வெல் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கர்ண் ஷர்மா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ், க்ளென் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: