மட்டக்களப்பில் “மாண்புமிகு மலையகம்” ஒளிப்பட கண்காட்சி .

மாண்புமிகு மலையகம் என்ற தலைப்பில் மூன்று நாட்களைக் கொண்ட ஒளிப்பட கண்காட்சி மட்டக்களப்பு ஊறணி, சிலோன் அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
இருநூறு வருட மலையக மக்களின் உரிமைகள் இன்னமும் கிடைக்கப் பெறாத நிலையில் அவர்களுடைய வாழ்வியல், கலாசாரத்தை எடுத்துக்காட்டும் வகையிலும் நேற்று 15ம் திகதி ஆரம்பமான இக்கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
இதனை “இருப்பை உறுதிப்படுத்துவோம் தோழமையை வலுப்படுத்துவோம்” என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்துவ மன்றம் இணைந்து ஒழுங்கமைவு செய்துள்ளது.
இக் கண்காட்சியானது அருட்தந்தை ஜீரோன் த லிமா தலைமையில் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய தலைவர், செயலாளர், உப செயலாளர் மற்றும் பொருளாளர்களின் ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒளிப்பட கலைஞர் எஸ். கிசோக்குமார் இக்கண்காட்சியில் 40 வரலாறு சம்பந்தப்பட்ட படங்களினையும் 35 ஆய்வு சம்பந்தமான படங்களினையும் உணர்வு பூர்வமான ஆக்கங்களாக வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார்.
இக்கண்காட்சியின் இறுதி நாளான 17-ம் திகதி மாலை 3 மணிக்கு மலையக மக்களின் வாழ்வியல் கலாசாரம் சம்பந்தமான கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஒளிப்பட ஆர்வலர்கள் கலந்துகொண்டுவருகின்றனர்.






