இலங்கைமுக்கிய செய்திகள்வட மாகாணம்

மன்னாரில் சமுர்த்தி பயனாளிகள் 2வது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு!!

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட மற்றும் உள் வாங்கப்படாத பயனாளிகள் இன்று வியாழக்கிழமை (22) காலை முதல் 2 வது நாளாகவும் மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் பணம் வசதி உடைய மற்றும் மாடி வீடுகளில் வசிப்பவர்களும் உள்வாங்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் தேவையுடைய மாற்றுத்திறனாளிகள், விதவைகள், சிறுநீரக நோயாளிகள்,சொந்த வீடு இல்லாதவர்கள், உட்பட பலரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறித்த பட்டியல் பொருத்தமற்றது என தெரிவித்து குறித்த போராட்டத்தை 2வது நாளாகவும் முன்னெடுத்திருந்தனர்.

நாட்டில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, விலைவாசி அதிகரிப்பினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாசவின் வீட்டுத் திட்டத்தினால் கடனாளிகளாக உள்ளதாகவும் இன்னும் பல பெண்கள் நுண் நிதி நிறுவனக்களில் கடன் பெற்று வாழும் இவ்வாறான நிலையில் சமுர்த்தி கொடுப்பனவு பட்டியலில் தங்கள் பெயர் நீக்கப்பட்டமை தங்களை ஏழ்மையில் தள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் வேலை எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் மன்னார் நகர் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் சந்தித்து புதிய நடைமுறை தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் பிரதான பாலத்தடி மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் ஆகிய இடங்களுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகள் அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட,மற்றும் உள் வாங்கப்படாத பயனாளிகள் அனைவரும் ஒன்றினைந்து மாவட்ட ரீதியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: