மட்டு காந்தி பூங்காவில் ஆரம்பமான ஓவியத் திருவிழா
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்தும் கிழக்கின் ஓவிய திருவிழா கண்காட்சி இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (21) காலை இந்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஓவியர்களுடைய படைப்புக்களும், கைப்பணி பொருட்களும் காட்சி படுத்தபட்டுள்ளன.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச. நவநீதன், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி ஹெனடி, மாவட்ட கலாச்சார இணைப்பாளர் த. மலர்ச்செல்லன், பேராசிரியர் பாலசுகுமார், சிரேஷ்ட விரிவுரையாளர் சு. சிவரெத்தினம், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக கட்புல மற்றும் தொழில்நுட்பத் துறைத் தலைவர் ச. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஓவியங்களும், கைப்பணி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மனித உருவங்கள், இயற்கை காட்சிகள், தமிழர் பண்பாடு பாரம்பரியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார பாரம்பரியங்கள், கலை மற்று சடங்கை வெளிப்படுத்தும் ஓவியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த ஓவியத் திருவிழாவை பெருமளவான பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர். இக் கண்காட்சி இன்றும், நாளையும், நாளைமறுதினமும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.
(அனட் பாலசுப்பிரமணியம், கவியேந்திரன் சஞ்ஜீவ்)
















