மட்டக்களப்பில் மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

மட்டக்களப்பு நகரில் மதுபோதையில் மனைவி மகனைத் தாக்கிய கணவருக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற மனைவி மகனை அங்கு சென்று கலவரம் ஏற்படுத்திய பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச செயலகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் ஒருவர் சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை மதுபோதையில் மனைவி மகன் மீது தாக்கியுள்ளார் இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி பொலிஸ் நிலையம் போவதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர்.
இதனையடுத்து “பொலிஸ் நிலையத்துக்கா செல்லுகின்றீர்கள் நானும் வாரேன்…அங்கு இரண்டில் ஒன்று பார்ப்பதாக” கணவர் அவர்களை பின் தொடர்ந்து பொலிஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை வைத்தியசாலையில் அனுமதித்து மதுபோதை பாவித்தாரா என உறுதிபடுத்திய பின்னர் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டகோவை 1979 ம் ஆண்டு 4ம் பிரிவின் கீழ் மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்து மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது அவரை 2 ஆயிரத்து 500 ரூபா அபதாரம் செலுத்துமாறும் 25 ஆயிரம் ரூபா கொண்ட ஒருவருட நன்னடத்தை பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.