மட்டக்களப்பில் மதுபானத்தை வாங்கி கொண்டு பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணியில் இருந்து இடைநிறுத்தம்

மட்டக்களப்பில் மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கி கொண்டு பணம் கொடுக்காது முச்சக்கரவண்டியில் தப்பி ஓடிய பொலிஸ் பரிசோதகர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டு நகரிலுள்ள மதுபானசாலைகள் இரண்டில் சம்பவதினமான கடந்த வெள்ளிக்கிழமை பகல் முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று மதுபானசாலையில் அரைப் போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு பணம் முச்சக்கரவண்டியில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவதாகவும் தெரிவித்து மதுபானத்தை வாங்கி கொண்டு பணத்தை கொடுக்காது முச்சக்கரவணடியில் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவில் பதிவாகியதுடன் அது ஊடகங்களில் வெளியாகியது.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் பரிசோதகர் வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருபவர் எனவும்,
அவர் சம்பவதினம் பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு செல்வதாக கடமை கையேட்டில் பதிவிட்டுவிட்டு வெளியேறி இந்த மோசடியில் ஈடுபட்ட பின்னர் அவர் பொலிஸ் நிலையத்துக்கு திரும்பாது தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே தங்க மாலை அறுத்து திருடிய குற்றச்சாட்டு உட்பட 7 குற்றச்சாட்டுக்கள் காரணமாக 7 தடைவைகள் பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிசாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய அவரை உடனடியாக பணியிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாக அந்தப் பொலிஸ் அதிகாரி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஆதாரத்தை பார்வையிட: https://fb.watch/mZJwQ7KEr6/