மட்டக்களப்பில் சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதிசெய்யுமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
வடகிழக்கில் சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதி செய்யுமாறு கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது கோஷங்களை வெளிப்படுத்தினர்.
வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி பொறிமுறை, வடகிழக்கு மக்களின் கலாச்சார தளங்களை அத்துமீறாதே, சமூக செயற்பாட்டார்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களின் இன அடையாளங்களை அழிக்காதே, போர்க்குற்றங்கள் செய்தவரை நீதியின் முன் நிறுத்து. வெள்ளைவான் கடத்தல்காரரை நீதியின் முன் நிறுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜ.நாவிற்கான அறிக்கை ஒன்றும் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.


