மட்டக்களப்பில் கடுங் குற்றவாளிகள் இருவர் பல்வேறு நிபந்தனைகளில் பிணையில் செல்ல அனுமதி

மட்டக்களப்பில் கடுங்குற்றவாளிகள் என இருவருக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கில் இருவரையும் ஒருவருட நீதிமன்ற சமூக சீர்திருத்த கண்காணிப்பிலும் குற்றம் இடம்பெறும் இடத்திலே மற்றும் குற்றச் செயலில் ஈடுபடக் கூடாதென்றும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடக் கூடாது எனவும் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும் என்ற பல நிபந்தனைகளுடன் இருவரையும் நன்னடத்தை கொண்ட ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளார்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் 24 மற்றும் 26 வயதுடைய இருவர் தொடந்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளை, கூலிக்கு ஆட்களை அடிப்பது, ஆட்களை வாளால் வெட்டுவது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்த நிலையில் இந்த இருவரும் ஆபத்தானவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 83 ம் பிரிவின் கீழ் பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்த திங்கட்கிழமை (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது இருவரையும் ஒருவருட நீதிமன்ற சமூக சீர்திருத்தக் கண்காணிப்பிலும் குற்றம் இடம்பெறும் இடத்திலே மற்றும் குற்றச் செயலில் ஈடுபடக் கூடாதென்றும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடக் கூடாது எனவும் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மாலை 4 மணி தொடக்கம் 6 மணிக்குள் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டு இருவரையும் நன்னடத்தை கொண்ட ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளார்.
