சகல துறைகளிலும் பிரகாசித்த கொல்கத்தா 6 விக்கெட்களால் சென்னையை வீழ்த்தியது!

சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்களால் சென்னை சுப்பர் கிங்ஸை வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.
அப் போட்டியில் அணித் தலைவர் நிட்டிஷ் ரானா, ரின்கு சிங் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களும் அவர்கள் பகிர்ந்த 4ஆவது விக்கெட் இணைப்பாட்டமும் கொல்கத்தாவை இலகுவாக வெற்றிபெறச் செய்த ன.
சென்னையினால் நிர்ணயிக்கப்பட்ட 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட்டை இழந்தபோது 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நிட்டிஷ் ரானாவும் ரின்கு சிங்கும் 4ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து அணி வெற்றிபெறுவதற்கு பெரும் பங்காற்றினர்.
நிட்டிஷ் ராணா 57 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ரின்கு சிங் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் தீப்பக் சஹார் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பெடுத்தாடுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட சென்னை சார்பாக மூவர் மாத்திரமே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
8ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 61 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த சென்னை அதன் பின்னர் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்து நெருக்கடியை எதிர்கொண்டது. (72 – 5 விக்.)
ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னையை கௌரவமான நிலையில் இட்டனர். ஆனால் சென்னையினால் 144 ஓட்டங்களை தக்கவைக்க முடியாமல் போனது.
துடுப்பாட்டத்தில் ஷிவம் டுபே ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் டெவன் கொன்வே 30 ஓட்டங்களையும் ரவிந்த்ர ஜடேஜா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சுனில் நரேன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்கரவரத்தி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் அணிகள் நிலையில் 15 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் சென்னை இருக்கிறது. குஜராத் 16 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது.
ப்ளே ஓவ் சுற்றுக்கு முன்பதாக இன்னும் 9 போட்டிகளே எஞ்சியுள்ளன.