கிரான் பிரதேசத்தை மேம்படுத்த புதிய திட்டம்

காலநிலை மாற்றங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்படும் கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கிராமங்களை சைல்ட்பண்ட் நிறுவனத்தின் நிதிஉதவியுடன் மேம்படுத்த புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இப்புதிய திட்டம் ஆரம்பிக்கப்படுவது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கும் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது காலநிலை மாற்றத்திற்கேற்ப மழை வெள்ளத்தினாலும், வரட்சியினாலும் பெரிதும் பாதிக்கப்படும் கிரான் பிரதேச செயலகப் பிரவிலுள்ள குடும்பிமலை, கோறாவெளி, முறுத்தானை, பேரில்லாவெளி, ஊத்துச்சேனை ஆகிய ஐந்து கிரமங்கள் இத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இக்கலந்துரையாடலில் சைல்ட்பண்ட்- நியூசிலாந்து நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம். பௌலர், அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே. கஜேந்திரன், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார், அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் யூ.எஸ்.எம். றிஸ்வி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
சைல்ட்பண்ட் நிதியுதவியுடன் இடம்பெறவுள்ள இத்திட்டத்தினை அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினூடாக அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




