உள்ளூராட்சி சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

உள்ளூராட்சி சபை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(17) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது அமைச்சர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், உள்ளூராட்சி சபை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களை நிரந்தரமாக்குவதற்கு திரைசேறியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கான கொடுப்பனவை வழங்கக்கூடிய சில உள்ளூராட்சி சபைகள் இருந்த போதும் அத்தகைய சுமையை சுமக்க முடியாத சில உள்ளூராட்சி சபைகளும் காணப்படுகின்றன.
அந்த வகையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திரைசேறியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதற்கிணங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
