
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனுதவி இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கப் பெறுமென தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்க ஒப்புக் கொண்ட நான்கு வருட காலத்துக்குரிய 2.9 பில்லியன் டொலர் கடன் தொகையில் இரண்டாம் தவணை நிதியை பெறுவதில் தற்காலிக முடக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள விடயங்களை நிதியம் ஆராயவுள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கம், நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்துத்துடன் ஒப்பிட்டதன் பின்னர், இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்குவது தொடர்பான பணிப்பாளர் சபையின் அனுமதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான சீனாவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் இதுவரை நிதியத்துக்கு கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட ஆவணத்துடன் குறித்த ஆவணமும் கிடைக்கப் பெற்றால், இந்த மாத இறுதிக்குள் நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தவணையை இலங்கை பெற்றுக் கொள்ளலாமென கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
