இந்தியப் பெருங்கடலில் 39 பேருடன் கவிழ்ந்த கப்பல்!

39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான Lupeng Yuanyu 028 என்ற மீன்பிடி கப்பல் செவ்வாய்கிழமை அதிகாலை கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மீன்பிடி கப்பலில் 17 சீன பணியாளர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அவுஸ்திரேலியா, இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.