கிரிக்கெட்விளையாட்டுச்செய்திகள்

அவுஸ்திரேலியாவுடனான உலக டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்தியா தடுமாற்றம்

லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் குவித்த 469 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா மிக மோசமான நிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவைவிட 318 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பின்னிலையில் இருக்கிறது.

இந்தியா தனது முதலாவது இன்னிங்ஸை எதிர்பார்த்தவாறு சிறப்பாக ஆரம்பிக்கவில்லை.

துடுப்பாட்டத்தில் அசத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் அநாவசியமாக விக்கெட்டைத் தாரைவார்த்தார்.

ஸ்கொட் போலண்ட் வீசிய பந்தை புரிந்துகொள்ள முடியாதவராக விடுகை கொடுக்க விளைந்து 13 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார்.  (30- 1 விக்.) அதுவே இந்திய அணியின் சரிவிற்கான ஆரம்பமாக அமைந்தது.

கில் ஆட்டம் இழந்த அதே மொத்த எண்ணிக்கையில் ரோஹித் ஷர்மா 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஷர்மா களம் விட்டகன்றார்.

சிரேஷ்ட வீரர்களான சேத்தேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி ஆகிய இருவரும் இந்திய அணியைக் கட்டியெழுப்புவர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கெமரன் க்றீனின் பந்துவீச்சில் புஜாரா போல்ட் ஆனார். அவர் 14 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

தொடர்ந்து மிச்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித்திடம் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்த விராத் கொஹ்லி 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். (71 – 4 விக்.)

அதன் பின்னர் அஜின்கியா ரஹானேயும் ரவிந்த்ர ஜடேஜாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 71 ஓடடங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய உற்சாகத்தைக் கொடுத்தனர்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ரவிந்த்ர ஜடேஜா, நெதன் லயனின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளத் தவறி ஸ்மித்திடம் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அஜின்கியா ரஹானே 29 ஓட்டங்களுடனும் ஸ்ரீகர் பரத் 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், பெட் கமின்ஸ், ஸ்கொட் போலண்ட், கெமரன் க்றீன், நெதன் லயன் ஆகிய ஐவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். நெதன் லயன் தனது 2ஆவது ஓவரில் விக்கெட் வீழ்த்தியது விசேட அம்சமாகும்.

முன்னதாக போட்டியின் இரண்டாம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 327 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 469 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாம் நாள் காலை 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 361 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியா கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 7 விக்கெட்களை இழந்து 469 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

முதல் நாள் சதம் குவித்து நாயகனான ட்ரவிஸ் ஹெட், இரண்டாம் நாள் காலை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் 163 ஓட்டங்களுடன்; மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் ஸ்ரீகர் பரத்திடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

ட்ரவிஸ் ஹெட் 4ஆவது விக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித்துடன் 285 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

தொடர்ந்து கெமரன் க்றீன் (6), மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் கில்லிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (376 – 5 விக்)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 11 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டம்; இழந்தார். அவர் 19 பவுண்டறிகளுடன் 121 ஓட்டங்களைக் குவித்தார்.

மிச்செல் ஸ்டார் 5 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். (402 – 7 விக்)

எனினும் அலெக்ஸ் கேரியும் பெட் கமின்ஸும் 8ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். கேரி 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஜடேஜாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார்.

பின்வரிசையில் பெட் கமின்ஸ் (9), நெதன் லயன் (9), ஸ்கொட் போலண்ட் (1 ஆ.இ.) எவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

இந்திய பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 108 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷர்துல் தாகூர் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: