தினக்கூலியாளர்களின் நிலை பெரும் திண்டாட்டமே

0 78

மாதச் சம்பளத்தினைப் பெறும் தொழிலாளர்கள் ஓரளவேனும் வாழ்க்கையினைக் கொண்டு நடாத்தக்கூடிய சூழ்நிலை இருந்தாலும். இன்று தினக்கூலியாளர்களின்  நிலை பெரும் திண்டாட்டமாகவே இருக்கின்றது. இவ்வாறான தொழிலாளர்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. என இலங்கை அரசாங்க  ஆசிரியர்களின் சங்கத்தின் உப தலைவர் ஜீவராஜா ருபேசன் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு வலய தங்களுக்கான இணைப்பாளர் ரவிச்சந்திரனும் இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள். இவ்வாறு வாழ்த்துக்கள் கூறினாலும், மனதார அதைக் கூறமுடியவில்லை. காரணம், இன்றைய நாளில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டாலும் எமது நாட்டைப் பொறுத்தவரையில் தொழிலாளர்களது நிலைமை மிகவும் மோசமான நிலையிலுள்ளது. 
ஊழல் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கும், மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும்எங்களுடைய செயற்பாடுகள் தொடர்ந்தும் இருக்கும் என்பதுடன், ஊழல் ஆட்சியாளர்களுக்கு சோரம் போயுள்ள அதிகாரிகளையும் எதிர்கால நாட்டின் நலனுக்காக அவர்களையும் வீட்டுக்கு அனுப்புகின்ற செயற்பாடுகளையும் மேற்கொள்வோம் 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு, நிலையான மாதச் சம்பளத்தினைப் பெறும் தொழிலாளர்கள் ஓரளவு வாழ்க்கையினைக் கொண்டு நடாத்தக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. இருந்தபோதிலும், தினக்கூலியாளர்கள் மற்றும் விவசாயிகளின் நிலை பெரும் திண்டாட்டமாகவே இருக்கின்றது. தங்களுடைய அன்றாடத் தேவையானப் பூர்த்தி செய்யக் கஷ்டப்படும் இவ்வாறான தொழிலாளர்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மாணவர்கள் இன்றையப்  பொருளாதார நிலைக்கு முகங்கொடுக்க முடியாமலும், கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றார்கள்.


சப்பாத்து மற்றும் பயிற்சிப் புத்தகங்களை வாங்குவதற்கான போதிய வசதி கூட இல்லாத எத்தனையோ மாணவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அண்மையில், மட்டக்களப்புப் பிரதேசத்தில் பாடசாலை நேரத்தில் கடற்கரையோரத்தில் கையேந்தி நிற்கின்ற இரு சிறுவர்களைக் காணக் கிடைத்தது. இது  மனதை மிகவும் வருந்தச் செய்ததொரு கசப்பான உண்மையுமாகும்.

அந்த மாணவர்களிடம் விசாரித்தபோது, இன்றையப் பொருளாதார நிலைமைக்கு முகங்கொடுக்க முடியாமல் சாப்பாட்டுக்காக இவ்வாறு கையேந்துவதாகக் கூறினர்.
இவ்வாறான பல மாணவர்கள் இன்றைய சூழ்நிலையில் காணப்படுகின்றனர்.


பசியுடன் நெடுந்தூரம் நடந்து சென்று பாடசாலைக் கல்வியைப் பெறவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பல மாணவர்கள்  காணப்படுகின்றார்கள். இவர்கள் பாரியளவு மன அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர். ஆதலால், இவர்களின் பாடசாலை வரவும் இன்று குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் கடந்த நாட்களில் நியாயமான மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அனைத்துத் தொழிலாளர்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது,  ஆசிரியர்களுக்கு சில உயர் அதிகாரிகளால் அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டது.
இவ்வாறானவர்களுக்கும், அரசாங்கத்திற்கும் ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.


இன்றைய தொழிலாளர் தினத்திலே உறுதியாகக் கூறுகின்றோம். தொடர்ந்தும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ஊழல் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கும் எங்களுடைய செயற்பாடுகள் தொடர்ந்தும் இருக்கும் என்பதுடன், ஊழல் ஆட்சியாளர்களுக்கு சோரம் போயுள்ள அதிகாரிகளையும் எதிர்கால நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களையும் வீட்டுக்கு அனுப்புகின்ற செயற்பாடுகளையும் மேற்கொள்வோம் என்பதனையும் கூறிக்கொள்கின்றோம் எனெ தெரிவித்தார்

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!