திருகோணமலை பொது வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தினை விரைவில் இயக்குவதற்குரிய நடவடிக்கை!

0 232

திருகோணமலை பொது வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தினை விரைவில் இயக்குவதற்குரிய நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொற்றை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களுடைய மாதிரிகள் மட்டக்களப்பு போன்ற வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு பெறுபேறுகள் பெறப்பட்டு வருகின்றன.

இதற்காக அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றும், மூன்று ஊழியர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் காலதாமதம் ஏற்படுவதனால் தொற்றை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதனாலும்,

மரணிக்கின்றவர்களின் இறுதி நிகழ்வை தாமதமின்றி மேற்கொள்வதற்கும் திருகோணமலை வைத்தியசாலைக்கென  PCR இயந்திரம் ஒன்று தேவை என்றதன் அடிப்படையில் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியால் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன்  PCR இயந்திரம் ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த இயந்திரத்தின் மூலம் இதுவரை வெறும் 12 பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு இயந்திரம் கிடப்பில் கிடப்பதாகவும் இருப்பினும் அவ் இயந்திரத்தினை இயக்குவதற்குரியவர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

இந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையானது  PCR பெறுபேறுகளுக்காக தொடர்ந்தும் வெளி மாவட்ட வைத்தியசாலையிலேயே தங்கியிருக்கின்றது.

இதனால் ஒரு மணித்தியாலத்தில் பெறவேண்டிய பெறுபேற்றிற்காக இரண்டு தொடக்கம் மூன்று நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

அத்துடன் இரண்டு வாரங்களுக்கு மேலாக இன்னும்  PCR பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் பல நோயாளிகள் வைத்தியசாலையின் களங்களில் இருக்கின்றார்கள். விசேடமாக பல கர்பிணித் தாய்மார்கள் இந்த நிலையை எதிர் கொண்டு வருகின்றார்கள்.

இதனால் இன்னும்  PCR பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்ற மனவிரக்தியில் சில நோயாளிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

எனவே வைத்தியசாலை நிர்வாகம் அதில் உள்ள சிக்கல்களைக் களைந்து  PCR இயந்திரத்தினை உடனடியாக மீள இயக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!