மே3- இலங்கையில் ஊடக சுதந்திரம் (சிறப்புக் கட்டுரை)

0 1,289

ஊடகங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும்  கருத்து சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்  விதமாகவும் ஒவ்வொரு வருடமும் மே 3ம் திகதி உலக ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றி வருகின்றன. பக்கச்சார்பற்ற உண்மை தன்மையோடு செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கையில் ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கொஞ்சமல்ல. அந்த வகையில் அநீதிகளை சுட்டிக்காட்டிய எத்தனையோ பத்திரிகை நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்படுவதும் தீவைத்து சேதமாக்கப்படுவதும் மேலும் ஊடகவியலாளர்கள் கடத்தி படுகொலைசெய்யப்படுவதும் நாம் எல்லோரும் அறிந்ததே இப்படியான கொடுமையான வரலாறுகள் நம் இலங்கை நாட்டிற்கும் உண்டு.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் 19வது திருத்தத்தில் உள்ள பேச்சுரிமையை உறுதிப்படுத்தும் விதமாகவும் அவற்றை சர்வதேச நாடுகளுக்கு நினைவுட்டும் விதமாகவும் மே 3ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் உலக ஊடக சுதத்திர தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

சுதந்திரமானதும் பல்தன்மையானதுமான ஊடக துறையை ஊக்குவித்தல் என்னும் தொனிப்பொருளில் யுனெஸ்கோ கருத்தரங்கு ஒன்று 1991 ஏப்ரல் 21 தொடக்கம் மே 3 வரை நமீபியாவில் உள்ள வைன்ட்ஹோக் நகரில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பத்திரிகை சுதந்திரத்திற்கான பிரகடனமொன்று ஆபிரிக்க ஊடகவியலாளர்களால் தயாரிக்கப்பட்டது Windhoek Declaration  எனும் இப்பிரகடனம் 1991ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தின் 26வது அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது.

பின் 1993ம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் மே 3ம் திகதி உலக ஊடக சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டது.

ஓவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் ஊடக சுதந்திரத்தில் பெரும் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு யுனெஸ்கோ நிறுவனம் ‘கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது’ என்ற விருதை வழங்கி வைக்கிறது. இவ்விருதானது கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாஸாவின் நினைவாக வழங்கப்படுகிறது. இவர் 1986 டிசம்பர் 17ம் திகதி தனது அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்த வரையில் பத்திரிகை சுதந்திரம் என்பது வாய்ப்பேச்சளவில் கூட இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு சம்பவம் நடந்தால் அச்சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உண்மையை ஆராய்ந்து ஆதாரங்களை திரட்டி அதன்பின் செய்தியை வெளியிடுவதே ஊடக தர்மமாகும். அந்நிலையானது இலங்கையில் பெரும்பாலும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஆட்சியாளர்களின் அடக்குமுறையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மாத்திரமே எவ்வித இச்சுறுத்தலும் இன்றி  இயங்க முடிகிறது. அது தமிழ் ஊடகங்கள் என்றாலும் சரி சிங்கள ஊடகங்கள் என்றாலும் சரி.

போர்காலங்களில் யுத்தம் நடைபெற்ற இடங்களுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. யுத்தம் முடிந்த பிறகும் வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத ஒரு பயங்கர நிலையே காணப்பட்டது. ஈழத்து ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டதும் கடத்தி படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தன.

இலங்கையின் ஊடக அடக்குமுறையின் கறைபடிந்த வரலாறானது 1990ம் ஆண்டு ஊடகவியலாளர் ரிச்சேட் டி சொய்சா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கிறது என குறிப்பிடலாம். அதன் பின் தமிழ் நெற் இணையத்தினுடைய ஆசிரியராக இருந்த தமிழ் ஊடகவியலாளர் தராகி சிவராம் 28 ஏப்ரல் 2005 அன்று கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அங்கிருந்து கொலைபட்டியல் நீண்டு கொண்டு வருகிறது.

இன்றுவரை அந்த வரிசையில் திருகோணமலை மாணவர்களின் படுகொலையை அம்பலப்படுத்திய உதயன் சுடர்ஒளி பத்திரிகை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுஜிதராஜ் கொலை செய்யப்பட்டார். பின்னர் 2006ம் ஆண்டு உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த சிலர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இருவரை சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் ஈழத்தின் மிகப்பெரும் ஊடகப்படுகொலை என வர்ணிக்கப்பட்டது.

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்பதை கார்டுன் கலைஞரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்கினியாககொட காணாமல் போன சம்பவம் உணர்த்தியது. அச்சம்பவத்திலும் கூட ஊடகவியலாளர் பிரகீத் எக்கினியாககொட தானாகவே காணாமல் போனதாகவும் அவர் யாராலும் கடத்தப்படவில்லை என்றும் அரசாங்கத்தால் அறிக்கையிடப்பட்டது.

2009 ஐனவரி 08ம் திகதி சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா இனந்தெரியாதோரால் கொல்லப்பட்டார். ஆனால் அவர் இறப்பதற்கு முன் தான் கொலை செய்யப்படலாம் என்று முன்கூட்டியே தெரிவித்திருந்தார் (“When finally I am killed, it will be the government that kills me.” – Lasantha Wickrematunge, Editor of the Sunday Leader”) என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தினமின பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் பொட்டல ஜயந்த கடத்தப்பட்டு தாக்கப்பட்டு வீசப்பட்டிருந்தார். அதனால் அவர் உயிர் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறினார்.  உயிராபத்தின் காரணமான பல தமிழ் ஊடகவியலாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சமடைந்தனர். அவ்வாறு வெளியேறிய ஊடகவியலாளர்கள்  சிலர் தாம் குடியேறிய நாடுகளின் ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றினார்கள்.

அதன்பின்னர் சிங்கள தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிறுவனமான சியந்த குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. சொல்லப்போனால் மக்கள் அரசுக்கெதிரான செய்திகளை அறியாமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட உத்திகளே இவை. மேலும் பிபிசி இலங்கை வானொலி ஊடாக ஒலிபரப்பப்பட்ட போதும் அது பல தடவைகள் தடைப்படுத்தப்பட்டது. பிபிசி தமிழ் சேவையில் அரசாங்கம் பற்றி விமர்சிக்கும் செய்திகளை ஒலிபரப்பும் போது அது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக வேறு இசை ஒளிபரப்பப்பட்டது. பிபிசி சிங்கள சேவை அடிக்கடி தடைபட்டது. முக்கியமாக ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் அரசுக்கு சார்பாக இயங்க நிர்பந்திக்கப்பட்டார்கள்.

இலங்கை ஊடகவரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் 2010 ஆண்டு ஊடக சுதந்திர தினமான மே 3ம் திகதி விடுதலை செய்யப்பட்டதாகும். ஆனால் அதற்கு காரணம் அமெரிக்க அதிபர் இலங்கையில் ஊடக ஒடுக்குமுறை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திஸ்ஸநாயகம் சுட்டிக்காட்டியிருந்தமையாகும்.

இச்சம்பவம் இலங்கையின் கறைபடிந்த ஊடக அடக்குமுறையை மறைப்பதற்காகும். எது எப்படியாயினும் நீதிக்காக தமது இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க முடிந்தும் கூட அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது ஊடகம் மீதான அடக்குமுறையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

இன்றும் நாடு ஒரு கொடிய நோய்த்தொற்றின் அச்சத்தில் இருக்கும் வேளையிலும் ஊடகவியலாளர்கள் எவ்வித பிரதிபலன்களும் இல்லாமல் சொல்லப்போனால் பலர் ஊதியமும் இல்லாமல் வீதியில் இறங்கி தமது பணியை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லாமல் தமது பணியை செய்ய அரசாங்கம் அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும். அநீதிக்கு எதிராக குரல்கொடுத்து கடத்தியும் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்நாளில் அஞ்சலிகள்.

Staff Writer – www.voiceofmedia.lk

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!