இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க உதவுங்கள் – ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் கடிதம்

0 503

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

குறிப்பாக இந்தியாவின் இந்த பதிலடி எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இந்தியாவின் பதிலடி எவ்வாறு இருக்குமோ? என்ற அச்சமும் அந்த நாட்டு தலைவர்களிடம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என ஆளாளுக்கு அலறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த பதற்றத்தை தணிப்பதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியையும் நாடி வருகின்றனர். அந்தவகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பிரான்சிஸ்கோ ஆன்டனியோ கார்ட்டொரியலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்முத் குரேஷி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புலவாமா தாக்குதல் விவகாரத்தில், இந்தியா தனது சொந்த கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் தோல்விகளை மறைக்க தவறான யூகங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது பழிபோடுகிறது. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக, வேண்டுமென்றே பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுவது மட்டுமின்றி பதற்றமான சூழலையும் உருவாக்குகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி பலமுறை கூறியிருக்கிறார். இதைப்போல இந்திய அரசின் மூத்த உறுப்பினர்கள் பலரும் அச்சுறுத்தல் விடுகின்றனர். சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீறி, தண்ணீரை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையே நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

எனவே இந்தியாவின் விரோத மனப்போக்கு மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான படை அச்சுறுத்தல் போன்றவற்றால் எங்கள் பிராந்தியத்தில் சீரழிந்து வரும் பாதுகாப்பை பலப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தற்போதைய பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெசிடமும் வலியுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி, தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதைப்போல ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!